இன வன்முறையில் போர்க்களமான இடங்களை சுத்தம் செய்த வாலிபருக்கு அடித்த மாபெரும் யோகம்.!!

அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன பொலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த 25-ஆம் திகதி கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாட்டில் இன்னமும் இப்படி நிறவெறியா என்று உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் விடிய விடிய போராட்டங்கள் நடந்து வருகின்றது.பல இடங்களில் போராட்டக்காரர்கள் பொலீசார் இடையே மோதல் வெடிப்பதால் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. போராட்டகாரர்கள் காலி போத்தல்கள், பதாகைகளை பொலீசார் மீது வீசுவதால் சாலைகளில் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.இந்நிலையில், நியூயார்க்கின் பப்பலோ நகரை சேர்ந்த 18 வயதாகும் இளைஞரான அன்டோனியோ க்வின் ஜூனியர் வித்தியாசமாக செயல்பட முடிவெடுத்துள்ளார். துடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் பைகளை கொண்டு வந்து சாலைகளை சுத்தம் செய்ய துவங்கியுள்ளார்.கடந்த 1- ம் திகதி அதிகாலை 2 மணிக்கு ஆர்மமாகி சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அன்டோனியோவின் பெயரும், பொறுப்புணர்வும் குறித்த செய்திகள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து பலரும் அன்டோனியோவுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய முன்வந்துள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்த மாட் பிளாக் என்பவர் தனது சிவப்பு நிற முஸ்டாக் காரை க்வினுக்கு பரிசாக அளித்துள்ளார்.மற்றொரு தொழிலதிபர் ஒருவர் ஒருவருடத்திற்கு இலவச காப்பீட்டு அளிப்பதாகவும், பப்பலோ நகரத்தில் உள்ள கல்லூரி நிர்வாகம், க்வினின் முழு கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.