அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் என்ற போர்வையில் திருமண அழைப்பிதழை விநியோகம் செய்த நபருக்கு நேர்ந்த கதி..!!

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் மக்களுக்கு அத்தியவசிய பொருட்களை எடுத்துச் செல்ல வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை காரில் ஒட்டிக்கொண்டு தனது சகோதரியின் திருமண அழைப்பிதழ்களை விநியோகித்து வந்த நபரை தாம் இன்று கைது செய்ததாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை ஏற்றிச் செல்ல இந்த நபர் கார் ஒன்றை வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளார்.அத்தியவசிய சேவை என்ற அறிவிப்பை காட்சிப்படுத்தியவாறு சென்ற இந்த வாகனத்தை அலவத்துகொட பூஜாப்பிட்டிய வீதியில் மறித்து பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

அந்த வாகனத்தில் அத்தியவசிய பொருட்களோ, அவற்றை எடுத்துச் சென்றமைக்கான அடையாளங்களோ இல்லாத காரணத்தினால், பொலிஸார் வாகனத்தை சோதனையிட்ட போது, வாகனத்தை ஓட்டி வந்த நபர் தனது சகோதரியின் திருமண அழைப்பிதழ்களை விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.