கிளிநொச்சிக்கும் வந்து விட்ட வெட்டுக்கிளிகள்.!! ஒரு வாழை மரம் முற்றாக நாசம்..!!

குருநாகல் மாவத்தகம பகுதியில் அடையாளங் காணப்பட்ட வெட்டுக்கிளி வட மாகாணத்தில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதா விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார்.வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த வெட்டுக்கிளி தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி பரவியுள்ளது.எனினும், வெட்டுக்கிளி பரவல் தகவல் பற்றி ஆராய்ந்து வருவதாக வடக்கு விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. வழமையாக வடக்கில் காணப்படுகின்ற வெட்டுக்கிளிகளையும் புதிதாக பரவி வருகின்ற வெட்டுக்கிளிகளாக விவசாயிகள் கருதுவதாக திணக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.இது சம்பந்தமாக விரிவான பரிசீலனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கிரிந்த புஹூல்வெல பகுதியில் ஒரு பெர்ச் அளவான நிலத்தில் 3 அடி உயரமுள்ள புல் புதரில் சுமார் 1,000 வெட்டுக்கிளிகள் குவிந்துள்ளதாகவும், அருகிலுள்ள வாழைத் தோட்டத்தை அவை நாசம் செய்துள்ளதாகவும், ஒரு வாழைமரத்தை முற்றாக தின்று தீர்த்து விட்டதாகவும் விவசாய சேவைகள் வட்டாரங்கள் தெரிவித்தன.உருகமுவ பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நான்கு அடி உயரமான புதரில் சுமார் ஐநூறு வெட்டுக்கிளிகள் உள்ளன.இன்று (3) அந்த பகுதிகளில் பெரதெனிய விவசாய கல்லூரியின் மேற்பார்வையில் இரசாயன மருந்து தெளிக்கப்படவுள்ளது.