மண்பானை சட்டி சமையலின் மகத்துவம்..! அவசியம் படியுங்கள்..!

நவீன காலத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் நாம் நமது பாரம்பரியத்தை தொலைத்து வருகின்றோம் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக சமைப்பதில் இந்த கால பெண்கள் பலரும் வேகமாக வேலைகளை முடிக்க நான்-ஸ்டிக் பொருட்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர்.


இதன் காரணமாக நமது பாரம்பரியமான மண் பானைகளும், இரும்பு சட்டிகளும் காணாமலேயே போனது. விளைவு உடல்நலக்குறைவுகள் மட்டுமே.

முதலில் மண்பானையின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம். பிறகு எந்த பாத்திரத்தில் சமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.

நமது பாட்டிகள் எல்லாம் மண்பானையில் சமைத்து நமக்கு பரிமாறியது, அதனை குடும்பத்துடன் அமர்ந்து கூட்டாக நாம் சாப்பிடது நிச்சயம் இன்றும் நினைவில் இருக்கும். இன்றும் கிராமப்புறங்களில் மண்பானையில் மட்டுமே சமைத்து வருகிறார்கள்.

நவநாகரீக வாழ்க்கை என்ற பெயரில் நகரங்களில் வாழும் மக்கள் நரக வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். காரணம், பசுமை மாறாத கிராமத்து வாழ்க்கை நகரங்களில் நாம் தொலைத்ததே. ப்ளாஸ்டிக் தடையால் தற்போது மக்கள் பார்வை மீண்டும் பாரம்பரியத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது.

மஞ்சப்பையை கொண்டு சென்று காய்கறிகள் வாங்குவது, டீக்கடைகளுக்கு தூக்குச்சட்டிகள் எடுத்துச்செல்வது என பல மாற்றங்களை தற்போது காணமுடிகின்றது.அதேபோல, பெண்களும் தங்கள் சமையலறையை 30 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்ல ஆசைப்படுகின்றனர். அதன் முயற்சியாக பலரும் மண்பாத்திரங்களை வாங்கி அலமாரிகளை அலங்கரிக்க தொடங்கியுள்ளனர்.

மண் பாத்திரத்தில் சமைக்க ஆரம்பிக்கும் முன் அதன் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். நாம் சமைக்கும் உணவில் வெப்பம் சம அளவு பரவி சீராக வேகவும், உணவின் தன்மை மாறாமல் மொத்த சத்துக்களும் நமக்கு கிடைக்கவும் மண் பானைகள் பெரிதும் உதவுகின்றது.

குறிப்பாக மண் சட்டியில் சிறிதளவு எண்ணெய் பயன்படுத்தினாலே போதுமானது. சுட்ட மண்ணில் செய்யப்படும் மண்பாத்திரங்களால் உடலுக்கும் பல நன்மைகள் உண்டு. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் இது உதவும்.

நான்-ஸ்டிக் போன்ற பாத்திரங்களில் சமைப்பதன் மூலம் அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் நம் உணவின் வழியே நமக்குள்ளும் சென்றுவிடும். இதனால் பல உடல் உபாதைகளுக்கு நாம் ஆளாகலாம். மண் பாத்திரத்தில் சமைக்கும் உணவை குளிர்சாதன பெட்டியில் வைக்கவேண்டிய அவசியமும் இல்லை.இரண்டு நாட்கள் ஆனாலும் உணவு கெட்டுப்போகாமல் அப்படியே நன்றாக இருக்கும். காய்கறிகளின் சத்துக்களை நமக்கு அப்படியே தருவதால், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாம் வாழலாம்.

இன்று நாம் குடிக்கும் குடிநீர் 100% சுத்தமானதா என்றால் அதற்கு பலரிடம் பதிலில்லை. பலரும் குடிநீரை சுத்திகரிக்க ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாட்டர் ஃபில்டர்களை வீட்டில் பயன்படுத்துவர்.ஆனால் நம்பர் ஒன் குடிநீர் சுத்திகரிப்பான் மண் பானைகள் தான் என இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மண் பானைகளில் தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் கழித்து குடிப்பதன் மூலம் அதில் உள்ள நச்சுத்தன்மை முழுவதும் நீக்கப்பட்டுவிடும். இதன்மூலம் குறைந்த விலையில் நமக்கு சுத்தமான குடிநீரும் கிடைக்கின்றது.

ப்ளாஸ்டிக் தடையால் பலரும் தற்போது வாழை இலை, பாக்கு மட்டை தட்டுகள் என இயற்கையான பொருட்களை உபயோகிக்க தொடங்கியுள்ளனர். இந்த மாற்றம் நமக்கும் சுற்றுசூழலுக்கும் நன்மை பயக்கும்.வீட்டிலும் முடிந்தவரை ப்ளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்க்க வேண்டும். மண் பாத்திரங்களை வாங்கி சமைப்பதன் மூலம் சிறு குறு தொழிலாளர்கள் பயனடைவதோடு நமது பாரம்பரியமும் காக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.