இலங்கை வாழ் தமிழர்களுக்கு நிவாரண நிதியாக 1.5 மில்லியன் ரூபாவை வழங்கிய புலம்பெயர் தமிழர்..!!

கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளை கருத்தில் கொண்டு நிவாரண பணிகளுக்காக 1.5 மில்லியன் (15 லட்சம்) ரூபாவினை புலம்பெயர் தமிழர் ஒருவர் வழங்கியுள்ளார்.

இந்நிதி மூலம் வலி தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஏழாலை மற்றும் குப்பிளான் கிராமங்களில் வாழும் சுமார் 1500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குகின்ற செயற்பாடு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏழாலை கிராமத்தினைச் சேர்ந்தவரும் லண்டனில் வசித்து வருபவருமான சிவலிங்கம் சிவகாந்தன் என்ற புலம்பெயர் தமிழரே தனது கிராம மக்களின் நலனகருதி நிவாரண பணிகளுக்காக சுமார் 15 லட்சம் ரூபாவினை வழங்கியுள்ளார்.நாட்டின் தற்போதைய நிலமை காரணமாக அன்றாடம் தொழில் புரிவோர் பலரும் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் ஏழாலை மைந்தனான சிவகாந்தனை தொடர்பு கொண்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உதவுமாறு வினயமாக கேட்டுள்ளனர்.இதையடுத்து உடனடியாக செயற்பட்ட சிவகாந்தன் 15 லட்சம் ரூபாவினை ஏழாலையின் சமூக செயற்பாட்டாளர் செல்வகாந்தனிடம் வழங்கியுள்ளார். இதன் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய ஏழாலை மற்றும் குப்பிளான் கிராமங்களில் வாழும் சுமார் 1500 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றது.இந்த அத்தியாவசியப் பொருட்கள் வழங்குகின்ற செயற்பாடு இன்று காலை வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்சன் தலைமையில் ஆரம்பித்துள்ளது. தனது சொந்த கிராமத்திற்கு நிவாரணப்பணிகளுக்காக மிகப்பெரிய தொகையினை வழங்கிய சிவகாந்தனின் அர்ப்பணிப்பை ஊா் மக்கள் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.