சுமந்திரனுக்கு கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு..!! உடன் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் தானாகவே விலக வேண்டும். அதுவே பொருத்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் பெரும் சர்ச்சை வெடித்திருந்தது. இதன்போது கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சம்பந்தனிடம் வலியுறுத்தியிருந்தார்.இவ்வாறானதொரு நிலையில் இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் பேசப்படும்போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின்பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரனாகவே விலகுவதுதான் பொருத்தமானது. அதுதான் அவருக்கும் நல்லது. நாமாக அவரை நீக்கியதாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, இப்போதைக்கு அவ்வாறு செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.எனினும், நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமந்திரன் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை.