கொரோனா காலத்தில் இலங்கைப் பாதுகாப்பு படைகளுக்கு உதவும் புதிய இலத்திரனியல் சாதனத்தை வடிவமைத்த கல்முனை மாணவன்.!! குவியும் பாராட்டுக்கள்..!

அம்பாறை மாவட்டம் கல்முனை மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் புதிய இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
வீதித் தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்களில் தானாகவே வாகனங்களை, நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான கண்டுபிடிப்பினை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளார்.நாட்டில் கொரோனா தொற்று நோயால் கடந்த 03 மாதங்களுக்கு மேலாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் இயங்காத இக்காலப்பகுதியில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு உதவும் வகையில் சமிஞ்சைகள் மற்றும் வீதித்தடைகளை மீறி செயற்படும் வாகனங்கள் சாரதிகளை மனிதவலு மற்று நேரங்களை மீதப்படுத்தி கட்டுப்படுத்த கூடிய இந்த புதிய தொழில்நுட்ப முறையை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளார்.இளம் வயதிலேயே புதிய தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்ட இந்த மாணவன் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் ‘சமூக இடைவெளியை பேணக்கூடிய நவீன ஸ்மாட் மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம்’ ஒன்றை கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தனியார் நிறுவங்களில் பணியாற்றுவோர் ,அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுநிறுவனங்களில் 1 மீற்றர் சமூக இடைவெளியை தமக்கிடையே மக்கள் பேணிக் கொள்வதற்கு இந்த சாதனம் பெரிதும் உதவுகிறது.அத்துடன் சமூக இடைவெளி மீறப்படும்போது ஒலியேழுப்பி கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன் இரவு வேளைகளில் ஒளி எழுப்பி சமிஞ்சை செய்யும் வகையில் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.