கொரோனா ஊரடங்கு காலத்தில் உடல் எடையைக் குறைக்க இதோ அருமையான டிப்ஸ்..!!

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தை அதிகரிக்க விடாமல் தடுக்கும் வகையில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலை, வேலை, வேலை என சுற்றி திரிந்தவர்களுக்கு இந்த 21 நாட்களும் வீட்டு சிறை போல தான் தோன்றும். ஆனால், இதனை அப்படி பார்க்காமல், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக காலமே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பாகவே கருத வேண்டும். அதுமட்டுமின்றி, வாரம் ஒரு நாள் மட்டும் விடுப்பு இருக்கும் சமயங்களில் செய்ய நினைத்து, முடிக்க முடியாத வேலைகளை தற்போது ஏன் செய்யக் கூடாது.

உடல் எடை குறைப்பு என்பது அனைவரது கனவாக கூட இருக்கலாம். ஜிம்மிற்கு செல்ல நேரமில்லை, டயட் இருக்க முடியவில்லை, ஹோட்டலில் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் காரணங்களாக இருக்கும். எனவே, இதுபோன்ற அரிய வாய்ப்பு இனி நம் வாழ்நாளில் நினைத்தாலும் கிடைத்திடாது. அதனால் தான், உடல் எடை குறைப்பிற்கு இந்த அரிய காலத்தை உகந்த முறையில் பயன்படுத்தி, ஃபிட்டான உடலை பெற்றிட முயலுங்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் நினைத்தாலும், ஹோட்டலில் சாப்பிட முடியாது என்பதால் வீட்டிலேயே எளிய முறையில் செய்திட கூடிய சில விஷயங்களை சொல்கிறேன். இத்துடன், வீட்டிலேயே சில உடற்பயிற்சிகளை முறையாக செய்து வந்தாலே போதும் உடல் எடையை குறைத்திடலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவு முறைகளை உடல் எடையை குறைத்திட உதவுவதோடு, சீரண மண்டலத்தையும் வலுவாக்கிடும். வாருங்கள், இப்போது உடல் எடையை குறைக்க உதவிடும் எளிய சமையல் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்…

பொதுவாக தென்னிந்திய உணவு முறையில் பெரும்பாலான உணவுகளில் கறிவேப்பிலை இடம் பெறுகிறது. எந்தவொரு சமையலாக இருந்தாலும், அதில் கறிவேப்பிலை சேர்ப்பது தமிழ்நாட்டு ஸ்டைல் என்றே சொல்லலாம். தென்னிந்தியர்களின் கட்டுக்கோப்பான உடலமைப்பின் ரகசியம் இதுவாக கூட இருக்குமோ என்னவோ? கறிவேப்பிலை கொழுப்பை குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடலின் செல்களில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையில், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றக்கூடிய பண்பும் உள்ளது. அதனால் தான், கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எவ்வித வயிற்று கோளாறும் ஏற்படுவதில்லை.

நீங்கள் சமைக்கும் உணவு எதுவாக இருந்தாலும் சரி, அதில் கருப்பு மிளகு சேர்ப்பதை மட்டும் உறுதி செய்திடுங்கள். காரம் அதிகம் சேர்ப்பது உடலுக்கு நல்லதல்ல என்பது பெரியர்கள் கூறுவது. ஆனால், அந்த பட்டியலில் மிளகின் காரணம் மட்டும் விதிவிலக்கு. ஏனென்றால், மிளகின் காரமானது வயிற்றுக்கு மிகுந்த நன்மையளிக்கக் கூடியது. கருப்பு மிளகு மற்று மஞ்சள் கலவை என்பது, கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த கலவையாகும். அதுமட்டுமின்றி, அவை உடலில் நச்சுத்தன்மையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

தவறான பொருளை உடல் எடை குறைப்பு பட்டியலில் சேர்த்துவிட்டேன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். சாதாரணமாக எண்ணெய், நெய் போன்றவற்றை உடல் எடை குறைப்பு காலங்களில் நினைத்துக் கூட பார்க்கக்கூடாது என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், அது தவறான தகவல். ஏனென்றால், நெய்யில் இருப்பது நல்ல கொழுப்பு. எனவே. எண்ணெய் மாதிரி உடலுக்கு தேவையில்லாத கெட்ட கொழுப்பை ஒன்றும் நெய் தருவது கிடையாது. ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய்யை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம், உணவின் சுவையும் கூடும், உடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகளும் வெளியேறும். மேலும், இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால், உடலில் கொழுப்பு குறைத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்பின் அளவை சீராக வைக்க உதவும்.

காய்கறி மற்றும் பழங்களை பச்சையாக அப்படியே சாப்பிடுவது தான் உடலுக்கு மிகவும் நல்லதென பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், அது தவறான கருத்து. ஏனென்றால், குழம்புகளில் சேர்க்கப்பட்ட காய்கறிகளுட்ன் ஒப்பிட்டு பார்க்கும் போது, பச்சை காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் குறைந்த அளவிலான ஊட்டச்சத்துக்கள் மட்டுமே கிடைத்திடும். எனவே, காய்கறிகளை குழம்புகளில் சேர்த்து சாப்பிடுவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். அதுவும், அவற்றை சூடாக சாப்பிடும் போது, தொண்டைக்கு இதமளித்து, தெளிவுப்படுத்திடும்.

குழம்புகளில் காய்கறிகளை வறுத்து சேர்ப்பவரா நீங்கள்? அப்படியெனில், முதலில் அதனை நிறுத்துங்கள். காய்கறி வறுத்து சேர்ப்பதை விட, வேக வைத்து சேர்ப்பது சிறந்தது. தனி பாத்திரத்தில் நீர் விட்டு காய்கறிகளை சேர்த்து வேக வைத்து பின்பு குழம்பில் சேர்க்க பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இதன் மூலம், காய்கறிகளில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக நமக்கு கிடைப்பது உறுதியாகும்.