மஸ்கெலிய பகுதியில் பிடிபட்ட கருஞ்சிறுத்தை பரிதாபமாக உயிரிழப்பு…!!

மஸ்கெலியா பகுதியில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வலை ஒன்றில் கடந்த 26ஆம் திகதி உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை இன்று (29) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா – நல்லதண்ணி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட லக்ஷபான – வாழைமலை பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்திலேயே அந்த கருஞ்சிறுத்தை பிடிபட்டது.அருகிவரும் உயிரினமான கருஞ்சிறுத்தைகள் இலங்கையில் மலைக்காடுகளில் வசிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் வனிஜீவராசிகள் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், உடலில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த கருஞ்சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி குறித்த கருஞ்சிறுத்தை இன்று உயிரிழந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிவனொளிபாத மலைக்கு அருகில் உள்ள நல்லதண்ணி பகுதியில் இது போன்ற 6 கருஞ்சிறுத்தைகள் வாழ்ந்து வருவதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.இவ்வகை கருஞ்சிறுத்தைகள் இலங்கையில் 1 வீதம் மாத்தரமே காணப்படுவதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.