வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்

நமது பாரம்பரியப்படி ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக அந்த வீடு இறைவழிபாட்டை மறக்காமல் இருக்க வேண்டும்.

இதற்காகத்தான் காலம்காலமாக நம்முடைய அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி இப்படி நம் தலைமுறையில் வந்த பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டு பூஜை அறையில் சாமி கும்பிடும் பழக்கத்தை நமக்காக சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிலர் வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றக் கூட நேரமில்லாமல் பணம் சம்பாதிக்க ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் இன்றளவும், தினம்தோறும் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, புதியதாக இறைவனுக்கு பூ சூட்டி, பூஜை செய்யும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை.

வீட்டில் இறைவனை வாரம் ஒரு முறை கூட இறைவனை வழிபட முடியாதவர்களுக்காக இந்த பதிவு. அந்த காலங்களில் எல்லாம் நம்முடைய வீட்டில் வெள்ளிக்கிழமை விளக்கேற்றி தீப, தூப, ஆராதனை காட்டும் சமயத்தில் வெற்றிலை, பாக்கு, பூ, வாழைப்பழம் இவற்றை தவறாமல் வாங்கி வைத்து பூஜை செய்வார்கள். ஆனால் காலப்போக்கில் வெற்றிலை, பாக்கு கூட வாங்கி வைக்காமல் விளக்கு ஏற்றி தீபாராதனை காட்டி வந்தார்கள்.அதுவும் சற்று காலங்களில் மாறி வெள்ளிக்கிழமை மட்டுமாவது விளக்கு ஏற்ற வேண்டும் என்று விளக்கினை ஏற்றி பவர்களும் சிலர் உள்ளார்கள். இப்படி நம் பழக்க வழக்கத்தை நம் வாழ்க்கையின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு வருகின்றோம்.

ஆனால் லட்சுமி தேவியின் அம்சமான வெற்றிலை, பாக்கை வைத்து வெள்ளிக்கிழமை பூஜை செய்வதில் இருக்கும் மகத்துவம் மிக அதிகம் என்பதை நம்மில் சிலர் அறிந்திருப்பதில்லை. முடிந்தவரை வெள்ளிக்கிழமை பூஜை சமயத்தில் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் சேர்ந்த தாம்பூலத்தை மகாலட்சுமிக்கும் படைத்து பூஜை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர மகாலட்சுமிக்கு உகந்த ஒரு சிறிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் தீர்ந்து சந்தோஷம் உண்டாகும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு வழக்கம்போல வெள்ளிக்கிழமை நம் வீட்டினை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் எத்தனை விளக்குகளை ஏற்றி வைத்து இருந்தாலும், மண் அகல் விளக்கில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைப்பது மிகவும் சிறந்தது.

முதலில் 5 வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் மேல் பகுதியில் 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம், 5 விரலி மஞ்சள், இவைகளை வைத்து கொள்ளவும். வெற்றிலையுடன் மேலே வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து நம் வீட்டில் இருக்கும் மகா லட்சுமி தாயாரின் படத்தின் முன்பு வைத்து ‘ஓம் மகாலட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரித்து விட்டு மகா லட்சுமி தாயாரை மனதார வேண்டிக் கொள்ளவும். அதன்பின்பு வெற்றிலை பாக்குடன் சேர்ந்த மற்ற பொருட்களும் வெள்ளிக்கிழமை முழுவதும் மகாலட்சுமியின் முன்பு வைத்துவிடுங்கள்.

மறுநாள் அந்த வெற்றிலை பாக்கை மட்டும் பசுமாட்டிற்கு வைத்துவிட்டு, மற்ற நாணயங்கள் மஞ்சள் இவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல் 11 வெள்ளிக்கிழமை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வர வேண்டும்.

மகாலட்சுமியை நினைத்து இந்த பரிகாரத்தை நம் வீட்டில் செய்துவந்தால் நம்முடைய வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் மறைந்து, எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். இதை 11 வாரங்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களால் முடிந்தால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி நினைத்து இந்த பூஜையைச் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.