அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்..!!

வழிபாட்டுத் தலங்களில் மக்கள் நடந்துகொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், விகாரைகள் மற்றும் கோவில்களில் வழிபாடுகள் மேற்கொள்ளும்போது அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள தொற்று தடுப்புமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வழிபாடுகளுக்காக ஒன்றுகூடும் முறைகள் மறு அறிவித்தல்வரை அனுமதிக்கப்படவில்லை எனவும், பக்தர்களின் வழிபாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் சமூக இடைவெளியினைப் பேணுவதாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் அனைத்துப் பக்தர்களும் முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கல் நடைமுறைகளைப் பின்பற்றியே செயற்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வழிபாட்டுத் தலங்களும் கொவிட் – 19 தடுப்பு முறைகள் அனைத்தையுமே கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்று கூடுதல், தொடுகை, பிரசாதப் பொருட்கள் வழங்கள், உணவு உள்ளிட்ட அன்னதானம் வழங்குதல், வழிபாட்டுக் கூட்டங்களை நடத்துதல், நினைவு வழிபாடுகள் ,பேரணியாகச் செல்லுதல் போன்ற எந்தவிதமான விசேட வழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெறக்கூடாதெனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், விசேட நிலைகளிலான வழிபாடுகளின்போது ஐவரிற்கு மேற்படாத தொகையினரே பங்குபற்ற வேண்டுமெனவும், இதன்போதும் அவர்களுக்கிடையில் ஒருமீற்றர் இடைவெளி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட வலயங்களில் வழிபாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடம்பெறுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எந்தவொரு மதத் தலைவராகிலும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியிருந்தாலோ அல்லது தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டாலுமோ, அவர்கள் மக்கள் மத்தியில் வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறு அறிவித்தல்வரை மதத் தலங்களில் வழமையான வழிபாட்டு நிகழ்வுகள், ஆராதனைகள் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குடும்பங்களில் முன்னெடுக்கப்படும் வழிபாட்டு நிகழ்வுகளில் வரையறுக்கப்பட்ட தொகையினரே ஈடுபடுவதுடன் அனைவரும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மதத் தலங்களில் வழங்கப்படும் எந்த விதமான ஆசீர்வதிக்கப்பட்ட பிரசாதப் பொருட்களையும் பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட கூடாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பக்தர்கள் தமது வீடுகளுக்கு மிகவும் அருகில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதுடன் தமது சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.