விளையாட்டின் மூலம் ஆண்டுக்கு அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை.!! மலைக்க வைக்கும் வருமானம்..!!

உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தைப் பிடித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயது ஒசாகா. இதன்மூலம் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ரூ. 10.64 கோடி (1.4 மில்லியன் டாலர்) அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளார் ஒசாகா.

கடந்த வருடம், உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (37) நான்காவது முறையாக முதலிடத்தைப் பிடித்தார். அவரது ஆண்டு வருவாய் சுமார் ரூ 207 கோடி ($29.2 மில்லியன்) என்று மதிப்பிடப்பட்டது. இந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் 36 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் ஒசாகா. இதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா தாண்டியுள்ளார்.

2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டுள்ளது. இதன் முழுப் பட்டியலில் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.