மன்னாரில் சிக்கிய அரிய வகை மீன் – பார்வையிட மக்கள் படையெடுப்பு

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 55 கிலோகிராம் எடையுள்ள அரிய வகை மீன் ஒன்று பிடிபட்டுள்ள நிலையில், அதனைப் பார்க்க மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

குறித்த கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு கடற்தொழிலாளர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று இன்று காலை சிக்கியுள்ளது.

இந்த நிலையில் குறித்த மீனை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, டால்பின், அணில் மீன், புள்ளி திருக்கை, சூரிய மீன் போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன.

எனினும் அரிய வகை மீனான சூரிய மீன் பெரும்பாலும் கடற்தொழிலாளர்கள் வலையில் சிக்குவது இல்லை.

இந்நிலையில் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு கடற்தொழிலாளர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியுள்ளது.

இது தொடர்பில் அறிந்து பாம்பன் துறைமுகத்திற்கு வந்த மண்டபம் மத்திய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மீனை ஆய்வு செய்துள்ளனர்.

இந்த வகை மீன்கள் இறால், நண்டு, சிப்பிகள், ஆமைகள், ஜெல்லி மீன்கள் ஆகியவற்றை உட்கொள்ளும் என்பதுடன், இதன் வால் துடுப்பு பகுதி மட்டும் உருமாறிக் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

200 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடிய இந்த வகை மீன்கள் ஒரு நாளைக்கு 26 கிலோ மீட்டர் தூரம் நீந்தக் கூடியவை.

பாம்பன் கடற்தொழிலாளர்கள் வலையில் சிக்கிய சூரிய மீன் 55 கிலோகிராம் எடை கொண்டது என்பதுடன், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் பாம்பன் கடற்தொழிலாளர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மீனை பார்வையிட பொது மக்கள் படையெடுத்து வருவதாக தெரியவருகிறது.