இலகுவாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்யமுடியும் என யாழ்ப்பாணம் – நவாலியினைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் செல்வராசா சுரேஸ்குமார் தெரிவித்தார்.
ஒரு லீற்றர் பயோ பெற்றோலை 100 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என அவர் கூறுகிறார்.
இவர் புதிய அடுப்பு மற்றும் வீட்டிலேயே எரிபொருள் தயாரிப்பது தொடர்பான ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார்.
இதன் மூலமே 100 ரூபாவுக்கு ஒரு லீற்றர் பயோ பெற்றோலை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் கூறுகிறார்.
இதேவேளை, வாணவன் அடுப்பு எனப் பெயரிடப்பட்ட அடுப்பு ஒன்றினையும் அவர் உருவாக்கியுள்ளார்.
தற்கால நெருக்கடியான சூழலில் வீட்டிலேயே எரிபொருளை தயாரிப்பது தொடர்பில் அவர் விளக்கமளித்து வருகிறார்.
இன்றையதினம் அதற்கான செய்முறை விளக்கத்தினை அவர் நிகழ்த்திக் காட்டினார்.
இதன்போது தேங்காய் எண்ணெய் / வேப்பெண்ணெய், சாம்பல் போன்ற இலங்கையில் இலகுவாக கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து பயோ டீசலினை இலகுவாக தயாரிக்க முடியும் எனவும்,
அதேபோன்று நீர் மற்றும் சிரட்டைக்கரி போன்ற காபன் வகைகளை பயன்படுத்தி பயோ பெற்றோலினை இலங்கையில் உற்பத்தி செய்யமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கான தயாரிப்பு மாதிரி செய்முறை விளக்கமும் அவரால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.
பயோ டீசலினை சாதாரணமாக வீட்டினிலேயே செய்யமுடியும் எனவும், பயோ பெற்றோல் தயாரிப்பதற்கு சுமார் 50 மில்லியன் முதலீடு தேவைப்படும் எனவும் இதற்கு அனுசரனையாளர்களும் அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் சூழலுக்கு பாதிப்பில்லாத எரிபொருளினை மிக குறைந்த விலையில் உற்பத்திசெய்து எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் எனவும் செல்வராசா சுரேஸ்குமார் கூறினார்.