குருந்தூர் விவகாரத்தில் தலையிட்டால் சுட்டுக்கொல்வோம்…!! வீடு தேடிச்சென்ற மர்ம நபர்கள் – புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் தனக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று (21) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இரண்டாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்ற வேலுப்பிள்ளை மாதவமேஜருடைய வீட்டிற்கு 15ஆம் திகதி இரவுவேளையில் சென்ற 2 பேர், துப்பாக்கி முனையில் தன்னை அச்சுறுத்தியதாக தெரிவித்தே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை பதிவு செய்த சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான வேலுப்பிள்ளை மாதவமேயர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

கடந்த 12 ஆம் திகதி குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் இருந்த பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த விகாரை அமைக்கப்பட்டு சிலை பிரதிஷ்டை நிகழ்வு இடம்பெறவிருந்ந நிலையில் அதனை தடுப்பதற்காக நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.

இந்நிலையில் அங்கு வருகை தந்த சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள மொழி தெரிந்த காரணத்தால் நான் அவர்களுடைய மொழியில் அவர்களுக்கு சில தகவல்களை வழங்கியிருந்தேன்

இந்நிலையில் குறித்த விடயங்களை முன்னிறுத்தி கடந்த 15 ஆம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு கைத்துப்பாக்கியுடன் எனது வீட்டுக்கு முன்னால் வந்த இரண்டு நபர்கள் எனது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுடைய பௌத்த கலாசரத்தை அழிக்க முயல்வதாகவும் அன்றைய போராட்டத்தை நான் தான் தலைமை தாங்கி நடத்துவதாகவும் இனிவரும் காலங்களில் இந்த விடயங்களில் தலையிட கூடாது எனவும் அவ்வாறு தலையிட்டால் தாங்கள் என்னை சுட்டுக்கொல்வோம் என்றும் மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர்கள் வந்து மிரட்டல் விடுத்த வேளையில் எனது அம்மா வந்த நிலையில், குறித்த நபர்கள் தனது வீட்டுக்கு முன்னால் உள்ள பற்றைக் காடுகள் ஊடாக ஓடிவிட்டனர்.

இவர்களுடைய நோக்கம் என்னைப்போன்ற செயற்பாட்டாளர்களை அடக்க முயற்சிப்பதே என அவர் குற்றம் சுமத்துகின்றார்.