கிளிநொச்சியில் மாயமானவர் காதலியுடன் கண்டுபிடிப்பு

கிளிநொச்சியில் காணாமல் போயிருந்த நபர் மட்டக்களப்பில் வசித்து வருவதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்தன் என்பவர் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் அவரது தாயாரினால் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த இளைஞன் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என இளைஞரின் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் அப்பகுதி இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அவரது காதலியுடன் அங்கு வந்து இருப்பதாகவும் தெரியவருகிறது.