கோட்டாவின் மரண தண்டனை

69 இலட்சம் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்த கோட்டபாய ராஜபக்ஷ தமக்கு வாக்களித்த நாட்டு மக்களுக்கு மரண தண்டனையை பரிசாக வழங்கியுள்ளார் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.

இன்று(21) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கையில் பணமில்லை. பணமிருந்தாலும் உணவில்லை. மின் வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, அரிசி, சீனி, எரிவாயு இல்லை. இருந்தாலும் அனைத்துக்கும் வரிசை என மரண தண்டனை கைதிகளைப் போன்று வாக்களித்த மக்கள் துன்பப்படுத்தப்படுகின்றனர்.

ராஜபக்ச குடும்பத்தினது மோசமான செயற்பாடுகளும் ஊழல் மோசடிகளுமே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட காரணமாக அமைந்ததுள்ளன.

நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி, மக்கள் துன்புறுத்தப்படுதல், தேசிய சொத்துக்களை பாதுகாக்க தவறியமை, தேசிய வருமானங்களை இல்லாமல் செய்தமை, ஊழல் மோசடிகள் போன்ற குற்றச் சாட்டுகளுக்கு காரணமாக இருந்த அல்லது அவற்றை தடுக்கத் தவறிய இவர்கள் யாரும் அதிகாரத்தில் இருப்பதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்.

எனவே இவர்களை வீட்டிற்கு அனுப்பும் வரை போராட்டம் தொடர வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவதன் மூலம் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.