கனடா மோகத்தால் தமிழ் இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை

கனடா செல்லும் மோகத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் இலட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்த சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது.

தமிழகம் – சேலத்தைச் சேர்ந்த விஜய சரவணன் ( 26) என்பவரே இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் குறித்த இளைஞருக்கு கனடாவில் வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவித்து மின்னஞ்சல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் குறித்த மின்னஞ்சலில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இளைஞர் சமர்ப்பித்துள்ளார்.

பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மின்னஞ்சல் அனுப்பிய தரப்பினை சேர்ந்த நபர், கனடாவிற்கு செல்ல தயாராக இருக்கும் படியும் 5 வங்கி கணக்குகளை கொடுத்து அதில் பணம் வைப்பு செய்யுமாறும் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து விஜய சரவணன் குறித்த 5 வங்கி கணக்குகளில் 8 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாவை வைப்புச் செய்துள்ளார்.

இதனையடுத்து மின்னஞ்சல் அனுப்பிய தரப்பினைச் சேர்ந்த நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் விமான பயணச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை அனுப்புவதாக கூறியுள்ளார்.

எனினும் இதனைத் தொடர்ந்து குறித்த நபரின் தொலைபேசி இலக்கம் முற்றாக செயலிழந்துள்ளது.

இதனை தொடர்ந்தே தான் மோசடிக்கு இலக்காகியிருப்பதை உணர்ந்து குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.