ராகு – கேது தோஷம் எதனால் ஏற்படுகிறது?

ராகு-கேது தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு எத்தனையோ விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அம்மன் கோவில் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்து – அம்பாளின் கோபத்திற்கு ஆளானதால் ஏற்படலாம்.

மூதாதையர்கள் செய்கின்ற புண்ணியங்கள் கிடைக்கிற போது அவர்கள் செய்யும் சில ரகசியமான பாவங்களை மூன்றாவது தலைமுறைக்கு எடுத்துக் காட்டவும் ராகு – கேது தோஷங்கள் ஏற்படலாம்.

சேர்ந்திருந்த தம்பதிகளை – அதிகாரத்தினாலோ அல்லது பகைமையினாலோ பிரித்த பாவத்தை அவர்களது மூன்றாவது தலைமுறையினர்கள் பெறுவதை சுட்டிக் காட்டவே ராகு – கேது தோஷம் ஏற்படுகிறது.

வயதான பெண்களை முன் ஜென்ம காலத்தில் சரியாகக் கவனிக்காமல் கொடுமைப்படுத்தியதற்கு – அவர்கள் இட்ட சாபம் கூட ராகு-கேது தோஷமாக மாறி மூன்றாம் தலைமுறையினருக்கு காலாகாலத்தில் திருமணம் நடைபெறாமல் தடுக்கவும், களத்திர ஸ்தானத்தில் ராகு ஜென்மத்தில் கேதுவாக மாறி கெடுதலைச் செய்கிறது.

குடும்பத்தைப் பிரித்து பெரியோர்களது சாபத்தைப் பெற்றதினால் அவர்களது சாபம் நிறைவேற குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டத்தில் கேதுவுமாக இருந்து மூன்றாவது தலைமுறையினரது இல்வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் ஆக்குவதோடு வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கவும் ‘ராகு-கேது’ செயல்படுகிறது.

சகோதரர்களை வஞ்சனை செய்து – கெடுத்து – ஏமாற்றி அவர்களது உண்மையான பாசத்தை மதிக்காமல் உதறித்தள்ளி கைவிட்ட போது – ‘அவர்கள் அடிவயிற்றிலிருந்து இட்ட சாபம்- ஒருவருக்கு மூன்றாவது வீட்டில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமாக 9-ம் வீட்டில் கேதுவும் இருக்கிறார்கள். ராகு-கேது தோஷம் அதிக பலமுள்ளதாகவே இருக்கும்.

சொத்து விஷயத்தில் ஏமாற்றிப் பிடுங்கியதோடு பெற்ற தாயின் வயிற்றெரிச்சலைக் கொட்டியதால் முன் ஜென்மத்தில் அந்த அன்னை இட்ட கண்ணீர் ராகு-கேதுவாக மாறி இந்த ஜென்மத்தில் இருக்கிற சுகங்களை இழக்க வைப்பதோடு சிறு வயதில் தாயைப் பறிக்கொடுக்க அல்லது இருக்கிற சொத்து சுகங்களை தேவை இல்லாமல் இழக்க நான்காம் வீட்டில் ராகுவும் அல்லது கேதுவும்.

வேலை செய்தபோது கூலி கொடுக்காமல் ஏமாற்றிய பாவமும் பொறாமை காரணமாக இன்னொருவர் வேலையைப் பறிக்க வைத்து, அந்தக் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைத்த பாவமும் சேர்ந்து ராகு-கேதுவாக மாறி இன்றைக்கு ஜீவனஸ்தானத்தில் அமர்ந்து தொழிலில் முன்னுக்கு வர முடியாமல் – தடுமாற வைக்க ராகு -4ல், அல்லது 10ல் கேது 4ல் அல்லது 10ல் அமர்ந்து தோஷத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பார்கள்.

குழந்தைகளை- குழந்தையென்று பாவிக்காமல் அவர்களைக் கொடுமைப்படுத்தி பெற்றோர்கள் அப்போது கடமையைத் தவற விட்டதின் காரணமாகவும், அந்தக் குழந்தைகள் அழுத ஒவ்வொரு கண்ணீர் துளியும் ராகு-கேதுவாக விஸ்வரூபம் எடுத்து இன்றைக்கு புத்திர பாக்கிய ஸ்தானத்தில் இருக்கலாம்.

நம்பிய நண்பர்களை ஏமாற்றி பிரித்து நடுத்தெருவில் நிறுத்தி விட்டு சொத்து, சுகம் போன்றவற்றை அபகரித்ததை முன் ஜென்மத்தில் செய்தமைக்காக இப்போது ஆறாம் வீட்டில் ராகு அல்லது கேது அல்லது பன்னிரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது இருக்கலாம் என்று அகஸ்தியரின் ஜீவ நாடியில் அகத்திய மாமுனிவர் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.