பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மக்களுக்கு விநியோகம்

மன்னார் திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களை கையிருப்பில் வைத்துக் கொண்டு மக்களுக்கு வழங்காது பதுக்கி வைத்திருப்பதாக மக்கள் மன்னார் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார சபை மாவட்ட பொறுப்பதிகாரி AM.ரெமிஸ் தலைமையிலான அதிகாரிகள் இணைந்து நேற்று வியாழக்கிழமை (16) இரவு குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சுப்பர் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.

2 ஆயிரத்து 47 லீற்றர் பெட்ரோல், 3 ஆயிரத்து 153 லீற்றர் டீசல் மற்றும் 3 ஆயிரத்து 196 லிட்டர் சுப்பர் பெட்ரோல் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த எரிபொருட்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.