சிகிச்சை பெறச்சென்ற இளம் யுவதிக்கு நேர்ந்த அவலம்!! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

மருத்துவ ஆலோசனை பெறவந்த, திருமணமாகாத இளம் யுவதியொருவரை தனது அறைக்குள் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, ஜன்னல் ஊடாக வெளியே தள்ளி கொலை செய்த வழக்கில் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வைத்தியர் ஒருவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வைத்தியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை விதித்ததுடன், 15 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் அத்துடன் 10,000 ரூபா அபராதமும் விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதிசெய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த தீர்ப்பு நியாயமானதும், சட்டத்துக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தது.

நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய பிரதிவாதியான வைத்தியருக்கு எதிராக, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த பின்னர், 2014 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி நீர்கொழும்பு மேல் நீதிமன்றினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து பிரதிவாதியினால் மேன்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மேன்முறையீட்டு நீதியரசர்களான சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமாரரத்னம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட யுவதி, தான் உயிரிழப்பதற்கு முன்னர் பிரதிவாதியின் அறையில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மரணத்துக்கு முன்னதாக அவர் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.