ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்த உத்தரவு

அரசாங்கத்திற்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

நேற்று கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடுமையான அவதானம் செலுத்துவதன் மூலம் பாரியளவிலான உணவுப் பொருட்களை பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அறுவடையை விநியோகிப்பதில் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலையை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளன.

அந்த நிறுவனங்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமான பிரதிபலன்களை அடைய முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.