யாழ்ப்பாணத்தில் முகமூடிக் கும்பல் அட்டகாசம்!! மூவர் படுகாயம் – 10 பவுண் நகை கொள்ளை

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இன்றைய தினம்(12) அதிகாலை கொள்ளைச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வடமராட்சி மந்திகை – கொடிகாமம் வீதி, மாக்கிராயன் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகமூடிக் கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அதிகாலைவேளை முகங்களை மறைத்தவாறு, வாள்களுடன் வீட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு, ஏனையவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி வீட்டில் இருந்தவர்கள் அணிந்திருந்த 10 பவுண் நகைகள் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.