வவுனியாவில் ஆணொருவர் அடித்து கொலை

வவுனியா பஜார் வீதியில் ஆணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றையதினம் இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீதியோரத்தில் கடையொன்றின் வாயிலில் இரத்தம் வெளியேறிய நிலையில் சடலம் காணப்பட்டதை அடுத்து, அவ்வீதியால் சென்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் அப்பகுதியில் நாட்டாமை (பொதி சுமக்கும்) தொழில் செய்பவர் எனத் தெரியவரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் அங்குள்ள சிசிரிவி கமராவில் குறித்த நபரை வேறு இருவர் அடித்து கொலை செய்வது பதிவாகியுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.