மாலையில்தான் சந்தித்தேன்…பேரதிர்ச்சியாக இருக்கிறது..ஆறுமுகன் தொண்டமான் மறைவு குறித்து இந்தியத் தூதுவர் வேதனை!!

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள் என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். புதிதாக பதவியேற்ற இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேக்கும், இ.தொ.க பிரதிநிதிகளிற்குமிடையில் நேற்று இரவு சந்திப்பு நடந்தது.சந்திப்பில் பின்னர் வீடு திரும்பிய ஆறுமுகன் தொண்டமான் வீட்டில் விழுந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக வைத்திய பரிசோதனையில் அறிவிக்கப்பட்டது.இது குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் மேலும் குறிப்பிடும்போது;

இன்று (நேற்று) மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் இந்த செய்தியினை நம்ப முடியவில்லை. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் சமூகத்தினதும் இலங்கையினதும் மதிப்புக்குரிய தலைவர். அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரது ஆத்மா சாந்திக்காகவும் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பினை அவரது குடும்பத்தினர் தாங்குவதற்கான பலத்துக்காகவும், பிரார்த்திக்கின்றேன் என இந்திய உயர்ஸ் தானிகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை இந்திய உயர் ஸ்தானிகர் மறைந்த அமைச்சர் ஆறுமகன் தொண்டமானை சந்தித்து தோட்ட தொழிலாளர்களிற்கான இந்திய வீடமைப்பு திட்டம், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மத்திய நிலையம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.