இன்னும் சொந்த வீடு கட்டலையா? இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். கூடிய விரைவில் எல்லாம் கைகூடி வரும்

இந்த உலகில் விலங்குகள் கூட தங்களுக்கென்று ஒரு வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றன. ஆனால் பல நாடுகளில், பல மனிதர்கள் பூமியையே மெத்தையாகவும், வானத்தையே கூரையாகவும் கொண்டு வாழ்கின்றனர். இத்தகைய நிலையில் வாழும் மனிதர்களை நினைக்கும் பொழுது நமக்கு வாழ்வதற்கு வீடு என்று ஒன்று இருப்பதற்காகவே நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். எனினும் ஒரு சிலருக்கு தங்களுக்கென்று சொந்த வீடு அமைய வேண்டும் என்கிற தீராத ஆசை இருக்கும். அத்தகைய சொந்த வீடு கனவு நிஜமாக ஒரு ஆன்மீக பரிகார முறை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

தினந்தோறும் ஏறும் விலைவாசியால் நாம் அன்றாடம் மூன்று வேளை உண்பதே பெரும்பாடாக இருக்கும் இன்றைய காலத்தில் நமக்கு சொந்த வீடு அமையும் என்பது வெறும் கனவு தான் என சிலர் துவண்டு போய்விடுவார்கள். ஆனால் தன்னம்பிக்கையும், முழுமையான இறை நம்பிக்கையும் கொண்டவர்களின் வாழ்வில் எத்தகைய அதிசயங்களும் நிகழும்.

பொதுவாக எந்த ஒரு ஆன்மீக பரிகாரத்தை செய்யும் பொழுதும், அதை செய்யத் தொடங்கிய சில தினங்களிலேயே பலனை எதிர்பார்ப்பது தான் பலருக்கும் பரிகாரங்களின் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. உதாரணத்திற்கு நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரு தென்னங்கன்றை நட்டு வைக்கிறோம், அந்த தென்னங்கன்று மறுதினமே மிகப்பெரிய தென்னை மரமாக வளர்ந்து நமக்கு இளநீர் கொடுக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. மாறாக அந்த தென்னங்கன்று கூடிய விரைவில் மரமாக வளர்ந்து, அதிலிருந்து இளநீர் பறித்து நான் அருந்துவேன் என திடமான நம்பிக்கை கொள்கிறோம். அத்தகைய நம்பிக்கையை ஆன்மீக பரிகாரங்கள் செய்யும் பொழுதும் கடைபிடித்தால் நிச்சயம் நாம் எதிர்பார்த்த பலனை பெறலாம். இப்பொழுது பரிகாரத்திற்கு வருவோம்.

ஒருவருக்கு சொந்த வீடு அமையும் யோகத்தை தரும் ஆற்றல் கொண்டவர் வாஸ்து பகவான் ஆவார். பொதுவாக நாட்காட்டிகளில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தினம் வாஸ்து நாள் என குறிப்பிடப்பட்டிருக்கும். அத்தகைய வாஸ்து நாளில் வீட்டின் பூஜையறையில் வாஸ்து பகவானின் படம் அல்லது எந்திரத்திற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, வாசனை மிகுந்த மலர்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, நெய் தீபம் ஒன்றை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

வாஸ்து நாளில் தொடங்கப்படும் இந்த வாஸ்து பகவானுக்குரிய தீபம் ஏற்றும் வழிபாட்டை பிறப்பு – இறப்பு தீட்டு நாட்களை தவிர்த்து தினந்தோறும் செய்ய வேண்டும்.

அதே போன்று ஒரு மனிதனுக்கு வாழ்வில் சுபமான பலன்களை மட்டுமே தரக்கூடிய ஒரே நவகிரக நாயகனாக இருப்பவர் குருபகவான். வியாழக்கிழமைகள் தோறும் சிவன் கோயிலுக்கு சென்று, அங்கிருக்கும் நவகிரக சந்நிதியில் குரு பகவானுக்கு மஞ்சள் கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

அனைத்து வியாழக்கிழமைகளிலும் கோயிலுக்கு சென்று இந்த குருபகவான் வழிபாட்டை செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை வியாழக்கிழமைகளில் மட்டுமாவது கட்டாயம் செய்ய வேண்டும். மேற்கூறிய இரண்டு பரிகார வழிபாட்டை, உங்களின் சொந்த வீடு கனவு நிஜமாக வேண்டி தீவிர நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வந்தால் பலன் நிச்சயம்.