தீராத வாயுத் தொல்லையினால் அவதிப்படுபவர்களா நீங்கள்? தீர்வுக்கு எளிய வழிகள்

மக்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சினையில் ஒன்று வாயுத் தொல்லை. இதற்கு முக்கிய காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் தான்.

வாயுத் தொல்லை ஒரு பெரிய பிரச்சினை இல்லையென்றாலும், இதனால் அவதிப்படும் மக்கள் ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை இலகுவில் எதிர்கொள்ள, நாம் இந்தப் பதிவில் வாயுத் தொல்லை வரக் காரணம் என்ன? அதன் அறிகுறிகள்? மற்றும் பரிகாரம் தெரிந்துகொள்ளலாம்.

வாயுத் தொல்லை வர காரணம்

அதிகம் எண்ணெய் உள்ள உணவு, சர்க்கரை அதிகம் உள்ள உணவு, துரித உணவு, பால் அதிக அளவு குடிப்பது போன்றவை வாயுத் தொல்லைக்கு காரணமாக இருக்கலாம்.

கோதுமை கலந்த உணவு சாப்பிடும் போது உடலில் glutenin அளவு அதிகரிக்கும் போது வாயுத் தொல்லை ஏற்படுகிறது.

ஒரு சிலர் நேரம் தவறிச் சாப்பிடுவதால் வாயுத் தொல்லை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

வாயு தொல்லை அறிகுறிகள்

சாப்பிட்டு முடித்ததும் ஏப்பம் வருவது வாயுத் தொல்லை இருப்பதற்கான முதல் அறிகுறியாகும்.

சிறிதளவு சாப்பிட்டால் கூட ஏப்பம் வருவது மற்றும் ஆசன வாய் வழியாக வாய்வு வெளியேறுவது, சாப்பிட்டு முடித்ததும் வயிறு வீங்கி இருப்பது போன்றவை உடம்பில் வாயு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

ஒரு சிலருக்கு காலையில் சாப்பிட்டால், மாலை வரை பசி எடுக்காது, இது போன்று பசி அதிகரிக்காமல் இருப்பது வாயு தொல்லை இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

வயிறு மந்த நிலையில் இருப்பது, மூச்சுப் பிடிப்பு, வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்றவை வாயுத் தொல்லை அறிகுறிகள் ஆகும்.

உணவு உண்ட பின்பு வயிறு உப்புசமாக இருப்பது, குதிக்கால் வலி, இடுப்பு பிடி, திடீரென்று தலைசுற்றல் வருவது போன்றவை வாயு தொல்லை இருப்பதற்கான அறிகுறியாகும்.

வாயு தொல்லை நீங்க எளிய வழிகள்

இந்தத் தொல்லை நீங்குவதற்கு சாப்பிடுவதற்கு முன்னர் மற்றும் சாப்பிட்ட பின்னர் அரை மணி நேரம் தண்ணீர் அருந்தக் கூடாது. இது உங்களுடைய ஜீரண மண்டலத்தை சீராக வைத்து கொள்ள உதவும்.

உணவை வேகமாக சாப்பிடாமல் நன்கு மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும். இனிப்பு மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளக் கூடாது.

கீரை சாப்பிடும்போது தயிர் மற்றும் பால் குடிக்கக் கூடாது. பழங்கள் சாப்பிடும் போது பால், தயிர், காய்கறிகள் சாப்பிடக் கூடாது.

துரித உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

உணவில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அசைவம் சாப்பிடும் போது காய்கறிகள் அதிகம் எடுத்து கொள்வது நல்லது.

வாயுத் தொல்லை அதிகம் உள்ளவர்கள் புதினா டீ, சோம்பு போன்ற ஜீரண சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.