யானை தாக்கி 6 மாதக் குழந்தை பலி

யானை ஒன்றின் தாக்குதலில் 6 மாதக் குழந்தை ஒன்று நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஒலுவில் பள்ளக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதக் குழந்தையே இவ்வாறு யானை தாக்குதலினால் உயிரிழந்துள்ளது.

பள்ளக்காடு பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மாடுகளை பராமரிக்கும் வேலையை தங்கியிருந்து செய்துவருவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று மாலை 5 மணியளவில் அந்தப் பகுதியிலுள்ள மரத்தின் கீழ் குழந்தையை படுக்க வைத்து விட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது அப்பகுதிக்கு திடீரென வந்த யானை மரத்தின் கீழ் படுத்திருந்த குழந்தையை தாக்கியதுடன் காயமடைந்த குழந்தை அங்கிருந்து மீட்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குழந்தை யானையின் தாக்குதலினால், ஏற்கனவே இறந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது. மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.