மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் பலி!

மத்திய மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் கடந்த 2 வாரங்களாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று மத்திய மெக்சிகோ பகுதியில் வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவ – மாணவிகள் மீது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 5 மாணவ – மாணவிகள் மற்றும் 65 வயது பெண் ஒருவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான அனைவரும் 16 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட வயதுடைய மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை. அவர்களை மெக்சிகோ காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மெக்சிகோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.