மணமகளுக்கு திருமணம் முடிந்த பின்பு பாலும், பழமும் கொடுப்பதன் பின்னணியில் இருக்கும் தத்துவம் என்ன தெரியுமா?

திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கு வீட்டிற்கு வந்ததும் முதல் உணவாக கொடுப்பது பாலும், பழமும் ஆகும். ஏன் மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுக்கப் படுகிறது? நம் முன்னோர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஏதாவது ஒரு பெரிய தத்துவம் ஒளிந்து கொண்டிருக்கும். அந்த வகையில் திருமணம் முடிந்த பின்பு ஏன் இவர்களுக்கு பாலும், பழமும் கொடுக்கப்படுகிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

 

திருமணம் முடிந்த பின்பு வீட்டிற்கு வரும் மணப்பெண்ணிற்கு பாலும், பழமும் கொடுப்பது என்பது, தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டுவிட்டு புதிய சூழலில் வாழப் போகும் புகுந்த வீட்டில் ஏற்படக்கூடிய கஷ்ட, நஷ்டங்களையும், கேலி, கிண்டல்களும் பொறுத்துக் கொண்டு விஷம் போன்ற வார்த்தைகளை அள்ளி வீசாமல் இருக்க பசும் பால் கொடுக்கப்படுகிறது. பசு மாடு விஷத்தையே உண்டாலும், அது சுரக்கும் பாலில் கொஞ்சம் கூட விஷத்தை கொடுப்பது கிடையாது. அதே போல மணப்பெண்ணும் இருக்க வேண்டும் என்பதற்காக பால் கொடுக்கப்படுகிறது.

அதே போல மணமகனுக்கும் பாலை கொடுக்கும் பொழுது கட்டிய மனைவியிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்க கொடுக்கப்படுகிறது. பாலில் தயிரும், நெய்யும் கண்ணுக்கு தெரியாமல் சேர்ந்தே தான் இருக்கிறது. பாலில் இருக்கும் தயிரையும், நெய்யையும் உரை போட்டு பக்குவமாக கடைந்து எப்படி எடுக்கிறார்களோ? அதே போல நீயும் உன்னுடைய மனைவியிடம் இருக்கும் அறிவையும், ஆற்றலையும் பக்குவம் இல்லாமல் அவசரப்பட்டுக் கெடுத்து வைக்காமல் மிகுந்த பொறுமையோடு, பக்குவமாக கடைந்து அவற்றை அவளிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறு கொடுக்கப்படுகிறது.

பாலுடன், பழத்தையும் கொடுப்பார்கள். அதுவும் வாழைப்பழத்தை கொடுப்பது எதற்காக தெரியுமா? மணமகளிடம் வாழைப்பழம் கொடுக்கும் பொழுது, வாழைப்பழம் விதைகள் இல்லாவிட்டாலும் அதன் மூல மரத்தை கொண்டே குலை தள்ளும். அது போல கணவனை மட்டும் சார்ந்தே வம்சத்தை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழைப்பழத்தை ஆதாரமாகக் கொடுக்கின்றனர்.

மணமகனுக்கு வாழைப் பழம் கொடுப்பதும் இதே போல ஒரு தத்துவத்திற்காக மட்டுமே ஆகும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வாழை மரத்தை நட வேண்டும் என்றால் அதன் தாய் மரத்திலிருந்து கன்றை தனியாக பிரித்து எடுத்து பக்குவமாக நட வேண்டும். அதே போல ஒரு வீட்டில் வளரும் பெண் குழந்தையை புகுந்த வீட்டிற்கு அனுப்பும் பொழுது பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எனவே மணமகன், மணமகளை வாடி போக விட்டுவிடாமல் பக்குவமாக அரவணைத்து வாழையடி வாழையாய் வம்சத்தை விருத்தி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொடுக்கின்றனர்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவார்கள். அதில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னாலும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கும். இவற்றை சிலர் தெரியாமலேயே செய்தாலும் அதில் இருக்கும் தத்துவத்தை புரிந்து கொண்டு செய்வதில் கூடுதல் பலன்கள் உண்டு எனவே ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் என்பதை அறிந்து அவற்றைத் தெரிந்து கொண்டு முறையாக செய்து, கடைபிடித்தும் வாழ்ந்தால் வாழ்க்கை இனிமை தான்.