தொடரும் எரிவாயு நெருக்கடி காரணமாக மூடப்படும் 1000 ஹோட்டல்கள்

தொடரும் எரிவாயு நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள 2000 ஹோட்டல்களில் 1000 ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் எரிவாயு கிடைக்காமல் நாளுக்கு நாள் ஹோட்டல்கள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள பெட்டிக்கடையில் ஹோட்டல்காரர்கள் வரை இன்று மிகவும் அநாதரவாகியுள்ளனர். கொழும்பில் 2000க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன.

 

இதில், ஹோட்டல் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 30,000க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் 800 முதல் 1000 ஹோட்டல்கள் செயற்பட்டு வருகின்றன.

எனினும், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிவாயு ஏற்றிக் கொண்டு கப்பலொன்று நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த கப்பலில் 3900 மெட்ரிக் தொன் எரிவாயு நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.