ரணிலின் திரைமறைவு நகர்வு அம்பலம்

ராஜபக்சர்களை காப்பாற்றவே ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றார் என பரவலாகக் குற்றஞ் சாட்டுகிறார்கள். ஆனால், அது உண்மையல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு இன்று தேவையானது, கடந்த தேர்தலில் படுதோல்வியடைந்த தன்னையும், அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் காப்பாற்றி, தூக்கி நிறுத்த வேண்டும்.

அவரது கட்சியை உடைத்துக்கொண்டு, வெளியே வந்து, புதிய கட்சி அமைத்து, நாட்டின் அடுத்த தலைவராக வரவேண்டும் என்று செயற்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பலவீனப்படுத்த வேண்டும். இவைதான் ரணிலின் பிரதான அரசியல் நோக்கங்கள். அதற்காக அவர் இன்று எதையும் செய்வார்.

அவரிடம் இப்போது இழக்க ஒன்றும் இல்லை. அவரை எவ்வளவு கழுவி ஊற்றினாலும் அவர் அலட்டிக்கொள்வதே இல்லை.

இந்த Soft Killer, மகிந்த ராஜபக்ச என்ற பிரதமரை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தைப் பிடித்து உள்ளே வந்துவிட்டார்.

இப்போது அமெரிக்க இலங்கை இரட்டைப் பிரஜையான பசில் ராஜபக்சவை அகற்ற அரசியலமைப்புத் திருத்தமொன்றை கொண்டுவர முயல்கிறார். அவரை அகற்ற அவரது ஆளும் கட்சியில் இருந்தே கணிசமான எம்.பிக்களை பிரித்து எடுத்துக்கொண்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷவையும் அனுப்பிவிட்டால், அவரது அடுத்த குறி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நோக்கித் திரும்பும். அவரை அனுப்பிவிட்டு, காலியாகும் இடத்தில் ஜனாதிபதியாக அமர ரணில் கனவு காண்கிறார் என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.