பாலுறவில் ஈடுபடும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை தகவல்

இலங்கையில் பாலுறவில் ஈடுபடுவோருக்கு எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எச்.ஐ.வி பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பரிசோதனைக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இந்தப் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படுகின்றமையினால் அவர்களுக்கு வருடத்திற்கு சுமார் 350,000 சோதனை கருவிகள் தேவைப்படுகின்றது.

ஏனைய நோயாளிகளுக்கு 100,000 இற்கும் மேற்பட்ட பரிசோதனைக் கருவிகள் தேவைப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில், முதல் மூன்று மாதங்களில் பரிசோதனை நடத்தாமல் இரண்டாவது மூன்றாவது மாதங்களில் இருந்து பரிசோதனைகளை நடத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளிடம் ஏற்கனவே பரிசோதனைக் கருவிகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.