அனத்துலக அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை

இலங்கை தற்போது உலகில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு கூறிய அவர், ஆசியாவின் ஐம்பதாண்டு கால வரலாற்றில் வங்குரோத்து நாடாக இலங்கை மாறியுள்ளதாக கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் ராஜபக்ஸ சாபம் ஏற்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாகிறது. அந்தச் சாபத்தின் மூலம் மக்களுக்கு பட்டினியும், வரிசையும், போஷாக்கின்மையுமே ஏற்பட்டது.

இன்று இந்த ராஜபக்ஸ சாபத்தால் இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் தவிக்க வேண்டியுள்ளது. அதனை மீட்பதற்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும் என கூறி ரணில் வந்தார்.

அண்மையில் இரண்டு வேளை சாப்பிடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளச் சொன்னார். இன்னும் 48 மணி நேரத்தில் வரிசையில் நிற்பதை நிறுத்துவேன் என்று கூறிய ரணில் வந்த பிறகு வரிசைகள் இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி பதவி விலகவிருக்கும் போது, ஒரு ஆசனத்தை மட்டும் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க வந்து இந்த அரசாங்கத்தை ஆதரித்து அவர்களை காப்பாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறார்.

இன்று நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக மாறிவிட்டோம், ஆசியாவின் ஐம்பதாண்டு கால வரலாற்றில் ஒரே வக்குரோத்து நாடாக மாறிவிட்டோம். கடனை அடைக்க அந்நிய செலாவணி இல்லாத நாடாக மாறிவிட்டது.

நாட்டில் நீண்ட வரிசை யுகத்தை அகற்ற வந்த அமைச்சர்களுக்கு என்ன நடந்தது? ஊழலோடும் மோசடிகளோடும், வழக்குகளோடும் தொடர்புபட்டவர்களே ஆளும் தரப்பில் உள்ளனர்.

இன்று அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு என்ன நடந்துள்ளது? நேற்றைய தினம் அவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையும், 25 மில்லியன் ரூபா அபராதத்துடன் ஐந்து வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாக உள்ளார் – எனக் கூறியுள்ளார்.