தொலைபேசியை திருடியதால் நேர்ந்த விபரீதம்

கொழும்பின் புறநகர் பகுதியான ராமகவில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரது இரு மகன்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கணேமுல்லைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபரின் கையடக்கத் தொலைபேசியை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதுடன், அது தொடர்பில் விசாரிக்கச் சென்ற போது சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைச் செய்துள்ளார்.

பின்னர் தலையிட்ட இரண்டு மகன்களும் தாக்குதலில் காயமடைந்து தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, எப்பாவல – எந்தகல சந்தியில் உள்ள வீடொன்றில் நேற்றுக் காலை இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பல சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்