சந்தைகளில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், சந்தைகளில் மேலும் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் தலபத் மீன் 1,700 ரூபாவிற்கும், பலயா மீன் ஒரு கிலோ கிராம் 1,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் சாலை மற்றும் லின்னா ஆகிய மீன்களின் மொத்த விற்பனை விலை 800 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 வீதம் அதிகரித்துள்ளதுடன்,சந்தைக்கு வரும் மரக்கறிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக குறைந்துள்ளது.

இதனை தவிர போஞ்சி, தக்காளி, கறி மிளகாய் ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை ஒரு கிலோ கிராமுக்கு 500 முதல் 700 ரூபாவாக அதிகரித்துள்ளன. அவற்றின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது.

எதிர்வரும் வாரத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.