மீண்டும் 1 ட்ரில்லியன் ரூபாவை அச்சிட திட்டம்

விரும்பியோ விரும்பாமலோ இன்னும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிடவேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் ஆற்றிய சிறப்பு உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று வாரங்கள் நாட்டிற்கு நெருக்கடியான காலமாக இருக்கும் என்றும், அதற்கு முகங்கொடுக்க நாட்டு மக்கள் தயாராகவேண்டும் என்றும் ரணில் கூறியுள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 3300 மில்லியன் டொலர்கள் தேவை.

அதேநேரம் 6 மாதங்களுக்கு எரிவாயு கொள்வனவுக்காக 250 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரிசி தேவையை எடுத்துக்கொண்டால், அடுத்த 6 மாதங்களுக்கு 2.4 மில்லியன் நெல் தேவை. எனினும் நாட்டில் 1.6 மில்லியன் நெல் மாத்திரமே அறுவடை செய்யமுடியுமாக இருக்கும்.

எனவே, அரிசி பற்றாக்குறையை தடுப்பதற்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு மாதத்துக்கு 150 மில்லியன் டொலர்கள் தேவை.

இந்த நிலையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல ஆறு பில்லியன் டொலர்கள் அவசியம்.

இந்தத் தொகையை நாட்டுக்குள் தேடமுடியாத நிலையில், வெளியில் இருந்தே இதனை தேடவேண்டியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.