ஐ.நாவில் ரஷ்யா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதுவர் வசிலி நெபென்சியா வெளியேறியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கல் முன்வைத்த குற்றச்சாட்டை அடுத்து அவர் வெளியேறியுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு எதிராக உணவுப் பொருட்களை மறைமுக ஏவுகணையாக ரஷ்யா பயன்படுத்துகிறது என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

போரினால் உக்ரைன் துறைமுகங்களில் உணவுகள் தேங்கியுள்ளன. உக்ரைன் சமையல் எண்ணெய், சோளம் மற்றும் கோதுமை மா என்பவற்றை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.

ரஷ்யா அதிகளவு தானியங்களை மற்றும் உரம் என்பவற்றை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஏற்றுமதிகள் இல்லாததால் மாற்றுப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய போரின் விளைவுகள் உலகம் முழுவதும் பரவுவதுடன், உணவு விலைகள் அதிகரிக்கப்பட்டு மக்களை வறுமைக்கு தள்ளியுள்ளது.

இந்த உணவு நெருக்கடிக்கு ரஷ்யா மாத்திரமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கல் குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த ரஷ்ய தூதுவர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் போலியான விடயங்களை பரப்புவதாக தெரிவித்தார்.