மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டன் நகரின் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக இன்று மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹட்டன் நகரின் ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குக் கடந்த 5ஆம் திகதி 6600 லீற்றர் மண்ணெண்ணெய் கிடைத்துள்ளது.

அந்த எரிபொருள் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் வரிசையில் கடைசியில் காத்திருந்த பெருந்தொகையான மக்களுக்கு அன்றையதினம் மண்ணெண்ணெய் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்றையதினம் மண்ணெண்ணெய் கிடைக்கும் என எரிபொருள் நிலைய ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து, மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

இன்று எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த மக்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் இல்லை என சம்பந்தப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமையை ஏற்படுத்தக்கோரி இன்று காலை முதல் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிலைய பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டம் காரணமாகப் போக்குவரத்தும் ஸ்தம்பிதமாகியுள்ளது.

குறிப்பாக ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி போன்ற பிரதான வீதிகளூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.