பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

மக்கள் எனக்கு 5 வருடகால ஆட்சிக்கு ஆணை வழங்கியுள்ளனர். எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு நேற்று வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக தாம் பதவி விலக போவதில்லை. நாட்டை சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே அவதானம் செலுத்தியுள்ளேன்.

ஏற்கனவே வழங்கிய வெற்றிகரமான சேவையை மீள ஸ்தாபிக்க விரும்புகிறேன். 6 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இலங்கைக்கான உதவிக்காக இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஓமானிடம் இருந்து நீண்ட கால எரிபொருள் ஒப்பந்தத்தை எதிர்பார்த்துள்ளேன்.

சலுகை கொடுப்பனவுகள் ரத்துச் செய்யப்பட வேண்டும். இராணுவத்துக்கும் பொதுச் சேவைக்குமான ஒதுக்கத்தை குறைக்க முடியுமே தவிர ரத்துச் செய்ய முடியாது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முழுமையாக ரத்துச் செய்து விட்டு வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் மறுபுறத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் காலிமுகத்திடலில் இரு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.