காலில் கருப்பு கயிறு அணிபவர்கள் செய்யக்கூடாத தவறு என்ன தெரியுமா? காலில் கருப்பு கயிறு எதற்கு அணியலாம்?

கருப்பு கயிறு என்பது பல துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கும் ஒரு அரணாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மதங்களை கடந்து இந்த கருப்பு கயிறு பல இடங்களில் மந்திரித்து அதற்கு சக்தி கொடுத்து பக்தர்களுக்கு கொடுப்பது உண்டு. இப்படி கருப்பு கயிறு அணிவதில் நம்பிக்கை கொள்ளும் சிலர், காலிலும் கருப்பு கயிற்றை அணிவதை நாம் பார்த்திருப்போம். ஏன் காலில் கருப்பு கயிறு அணிகிறார்கள்? கருப்பு கயிறு காலில் அணியும் பொழுது எப்படி அணிய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

பொதுவாக கோவில்களில் கருப்பு அல்லது சிவப்பு நிறங்களில் அதிகம் கொடுக்கப்படும் இந்த சுவாமி கயிறு மந்திர உருவேற்றி கொடுக்கப்படுகிறது. இதை கடைகளில் வாங்குவதை விட, கோவில்களில் வாங்குவது ரொம்பவே சிறப்பானது! கருப்பு கயிறு நம் உடம்பில் இருந்தால் நம்மை காத்து, கருப்பு எதுவும் அண்டாது என்று நம் முன்னோர்கள் கூறக் கேட்டிருப்போம்.

கருப்பு என்பது சிலருடைய குடும்பங்களில் ஒவ்வாத ஒரு நிறமாகவும் இருக்கிறது. கருப்பு என்பதில் இருக்கும் ஒரு அமானுஷ்யம் நம்மை கெட்ட விஷயங்களில் இருந்து காக்கும் என்பது மட்டும் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. கருப்பு கயிற்றை எந்த வயதினராக இருந்தாலும், உங்களுடைய வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்கள் கண்டிப்பாக இடுப்பில் கருப்பு கயிறு அணிவது மிகுந்த நன்மைகளை கொடுக்கக் கூடியது ஆகும். அரைஞான் கயிறு எனப்படும் இந்த கயிறு உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் நம்மிடம் நிச்சயம் இருக்க வேண்டும் என்பது நியதி.

துர் சக்திகளும், துர்தேவதைகளும் மந்திரிக்கப்பட்ட கயிற்றுக்கு அருகில் கூட நெருங்க முடியாது என்று கூறுவார்கள். எனவே இதை நாம் கட்டிக் கொண்டிருப்பதால் ஏதோ ஒரு விதத்தில் அது நமக்கு பாதுகாப்பை கொடுக்கிறது. அல்லது பாதுகாப்பு உணர்வை நம்முள் விதைக்கிறது. எனவே கருப்பு கயிறு கட்டும் பழக்கம் இன்றும் தொடர்ந்து வருகிறது. அப்படி இருக்க காலில் ஏன் கருப்பு கயிறு கட்டுகிறார்கள்?

 

காலில் கருப்பு கயிறு கட்டுவதால் நம்மிடம் எந்த தீய சக்திகளும் நெருங்காது என்பது நம்பிக்கை. எந்த ஒரு கெட்ட சக்தியும் கால் பாதம் வழியாக நம்முள் நுழைகிறது. குறிப்பாக பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை செய்து நடுரோட்டில் போட்டு வைப்பவர்கள், திருஷ்டி கழித்து தெருவில் அப்படியே போடுவார்கள். இதை தெரியாமல் மிதிப்பவர்கள் உடைய கால்கள் வழியாக எந்த விதமான கெட்ட சக்தியும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கால்களில் பொதுவாக கறுப்பு கயிறு கட்டப்படுகிறது. கால்களின் கட்டை விரல் நகத்தில் மை வைத்துக் கொண்டால் துஷ்ட சக்திகள் நுழையாது என்று அக்காலங்களில் கூறுவார்கள். எனவே பாதங்கள் வழியாக நுழையக் கூடிய துஷ்ட சக்திகளை தடுத்து நிறுத்த காலில் கருப்பு கயிறு அணியப்படுகிறது.

இப்படி கருப்பு கயிறு அணிபவர்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஸ்ரீராமஜெயம் உச்சரித்து 9 முடிச்சுகளை கறுப்பு கயிற்றில் போட்டுக் கொள்ள வேண்டும் அல்லது துர்காதேவி மந்திரத்தையும் நீங்கள் அந்நேரத்தில் உச்சரிக்கலாம். இம்மாந்திரத்தால் நல்ல ஒரு சக்தி கிடைக்கும். இதை சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணி அளவில் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து இவ்வாறு மந்திரத்தை உச்சரித்து 9 முடிச்சுகள் போட்டு பின்னர் உங்களுடைய வலது காலில் நீங்கள் அணிந்து கொள்ளலாம். இதுவே கருப்பு கயிற்றை காலில் அணியும் முறை ஆகும்.