பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதில் விடாப்பிடியாக நிற்கும் அரசாங்கம்..!!

நாடாளுமன்றத் தேர்தலை எப்படியாவது நடத்து முடித்து விடவேண்டும் என்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியாக இருப்பதனாலேயே, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் அவர் அக்கறை காண்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 1988ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் ஜே.வி.பியின் கிளர்ச்சி இருக்கும்போதே தேர்தல்கள் இடம்பெற்றன. அதேபோன்று இப்போதும் தேர்தல்கள் நடத்தலாம்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்களில் ஒருவரும் நேற்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றவருமான சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர், ஜனாதிபதியின் ஆலோசகரான சரித ஹேரத், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட சிலருடன் கலந்துரையாடினார்.

இதன்போது, “1988ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் ஜே.வி.பி. கிளர்ச்சி இடம்பெற்றது. அந்த நேரத்திலும் தேர்தல்கள் இடம்பெற்றன. மக்களின் வாக்களிப்புக் குறைவாக இருந்தது. அதேபோன்று இப்போதும் தேர்தலை நடத்தலாம். அதில் எந்தச் சிக்கலும்இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போதுள்ள அவசர நிலைமைக்குரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டபோது, “அரசிடம் இப்போது பெரும்பான்மை இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டங்களை நிறைவேற்ற முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, தேர்தல் நடத்துவது தொடர்பான திகதியைத் தீர்மானிப்பது தேர்தல்கள் ஆணைக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலை நடத்த முடியாமல் இருப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலருக்குக் கடிதம்அனுப்பியிருந்தமையும் நினைவில் கொள்ளத்தக்கது.