மீண்டும் எரிபொருட்களின் விலை எகிறும் சாத்தியம்

மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க அழைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்புக் காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

துறைக்கு சார்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, கடந்த மே மாதம் 24 ஆம் திகதி விலையில் திருத்தம் செய்யப்பட்டது.

தற்போது, 27ஆயிரம் மெற்றிக்தொன் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 12 ஆயிரம் மெற்றிக்தொன் ஒக்டேன் 95 போன்ற போதுமான எரிபொருள் கையில் இருக்கின்ற போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை குறைத்துள்ளது.

டீசலை பொறுத்தவரையில், தற்போதுள்ள அதன் இருப்பு ஐந்து நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து டீசல் இறக்குமதி செய்யப்படும்வரை, மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே மேற்கொள்ளப்படும் என்று ஆனந்த பாலித கூறியுள்ளார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இன்று முதல் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் 800 மெட்ரிக் தொன் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் சில நாட்களில் இந்தத் தொகையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.