கோட்டா – ரணிலுக்கு இடையில் வெடித்தது மோதல்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமனத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக தெரிய வருகிறது.

2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான மத்திய வங்கியின் ஆளுநரின் ஆறு வருட பதவிக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதனால் தற்போது புதிய ஆளுநரை அல்லது இந்த ஆளுநரையே மீண்டும் நியமிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனக்கு நெருக்கமான தினேஷ் வீரக்கொடியை ஆளுநராக நியமிக்க வேண்டும் என பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

எனினும் அதனை மறுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நந்தால் வீரசிங்கவை தொடர்ந்தும் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பு சூழ்நிலையில் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை நியமிப்பதற்கு முன்னர் நிதி அமைச்சரின் எழுத்துபூர்வ பரிந்துரையை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் இருக்கிறது.

இதன் பிரகாரம் நிதி அமைச்சராக ரணிலே பொருத்தமான நபரை பரிந்துரைக்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக செய்திகள் கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.