எப்படிப்பட்ட கண் திருஷ்டியும், தோஷமும் பட்டென்று விலக 1 டம்ளர் தண்ணீர் போதுமாம்

கண்திருஷ்டி, கண்ணுக்கு தெரியாத தோஷங்கள், அடுத்தவர்களுடைய பொறாமை குணம், வயிற்றெரிச்சல், இவை அனைத்தும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் சுலபமாக நாம் என்ன பரிகாரம் செய்வது என்பதைப் பற்றிய சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரே ஒரு டம்ளர் தண்ணீரை வைத்து இந்த பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. சுலபமான இந்த பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய துன்பத்திலிருந்து சீக்கிரம் விடுபட இந்த பரிகாரம் உங்களுக்கு துணையாக நிற்கும்.

பொதுவாகவே நம் வீட்டிற்குள் வருபவர்களால், வீட்டில் இருப்பவர்களுக்கும் வீட்டுக்கும் கண் திருஷ்டி படும். இவர்களுடைய வீடு மட்டும் இவ்வளவு அழகாக உள்ளது. இந்த வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலையை செய்கிறார்கள். இவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று, அவர்களை அறியாமலேயே ஒரு சிறிய எண்ணம் உண்டாகும். இந்த எண்ணம் தவறான எண்ணம் என்று சொல்லிவிட முடியாது. நம்மிடம் இல்லாத ஒன்று அடுத்தவர்கள் வீட்டில் இருந்தால் அதை பார்க்கும் போது நமக்கு ஒரு ஏக்கம் வரத்தானே செய்யும். இந்த ஏக்கம் தான் கண்திருஷ்டியாக மாறும்.

இது மட்டுமல்லாமல் சில சொந்தகாரர்கள் நம்முடைய வீட்டிற்கு சண்டை போட வேண்டும் என்ற எண்ணத்திலேயே வருவார்கள். விதண்டாவாத பேச்சை தொடங்குவார்கள். மனதிற்குள் கெட்ட எண்ணம் இருக்கும். வெளியே சிரித்து சிரித்து பேசுவார்கள். இப்படி எந்த நோக்கத்தோடு நம் வீட்டிற்கு வருகை தரும் விருந்தாளி, அல்லது நண்பராக இருந்தாலும் சரி, அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு முதலில் 1 டம்ளர் தண்ணீரைக் கொடுத்து விடுங்கள். அந்த தண்ணீரை பருகிய பின்பு அவர்களுக்கு எந்த கோபம் பொறாமை எண்ணம் இருந்தாலும் அது அப்படியே தணிந்துவிடும். அப்படியே கெட்ட எண்ணம் வெளிப்பட்டாலும் நமக்கு எந்த கெடுதலும் நடக்காது.

அடுத்தபடியாக வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சுத்தமான ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து அதில் 1 ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு, அப்படியே உங்களுடைய வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். கீழே ஊற்றி விடாமல் ஜாக்கிரதையாக வைக்கவேண்டும். இந்த தண்ணீரை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் எடுத்து அப்படியே நிலை வாசல்படிக்கு வெளிப்பக்கமாக கீழே ஊற்றி விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, எதிர்மறை சக்தி எல்லாம் இந்த தண்ணீரோடு சேர்ந்து வீட்டிற்கு வெளியே சென்றுவிடும். இதேபோல அமாவாசை தினத்திலும் இந்த தண்ணீர் பரிகாரத்தை செய்யலாம்.

இதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்றும், மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தன்றும் திருஷ்டி சுத்தி போடும் பழக்கத்தை வையுங்கள். ஒரு வாரம் மட்டும் திருஷ்டியை கழித்துவிட்டு அப்படியே விட்டுவிடக்கூடாது. தினம் தோறும் நாம் எதிர்கொள்ளக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள், பல பேருடைய கண்கள் நமக்கு பல தீவினைகளை செய்யக் கூடியதாக அமையும். (அமாவாசையன்று வரமிளகாய், கடுகு, கல்லுப்பு இந்த 3 பொருட்களையும் ஒன்றாக வைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி கழித்து நெருப்பில் போட்டாலே போதும்.

கல்லடி பட்டாலும் சீக்கிரம் ஆறிவிடும். கண்ணாடி பட்டால் அதில் வரும் துன்பம் ஏராளம். வாரம் வாரம் திருஷ்டி கழிக்கும் போது தான் நம்மை விட்டு நம் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி செல்லும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.