லொறியொன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்களுக்கு நேர்ந்த நிலை!

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து தம்புள்ளை பகுதிக்குச் சென்ற லொறியொன்றே இவ்வாறு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றினையும் மோதி வீடொன்றினுள் புகுந்துள்ளதாகவும் இதனால் வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் படுகாயங்களுக்குள்ளானதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியின் நித்திரை கலக்கமும், அதிக வேகமுமே விபத்துக்கு காரணமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தையடுத்து லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.