தல்பந்தகந்தை பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு இரண்டு யானைகள் உயிரிழப்பு

ஹபரனை பொலிஸ் பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளது.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற புகையிரதத்துடன் காட்டுயானைகள் நேற்றிரவு மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விபத்து காரணமாக கொழும்பு – ஹபரனைக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்விபத்தின் போது புகையிரதம் தடம் புரண்டதாகவும் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

புகையிரத பாதையின் போக்குவரத்தை சீர்செய்ய குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.