பம்பைமடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் விடுவிப்பு!

வவுனியா பம்பைமடு, கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இம்மாதம், 13 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட 212 விமான பயணிகளில் 167 பேர் இன்றையதினம் (28) விடுவிக்கப்படவுள்ளார்கள்.

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு கடந்த 13 ஆம் திகதி இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைதந்து சுமார் 212 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.இவர்கள் கடந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 167 பேருக்கு கொரோனோ தொற்று இல்லாதமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்றையதினம் (28) விடுவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் தமது வதிவிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.ஏனையவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.