கடலை மாவு குழம்பு சாப்பிட்டிருக்கிறீர்களா..? இதைப் படித்தால் இனி அடிக்கடி செய்து சாப்பிடலாம்.!!

பொதுவாக சுவையான உணவை தேடி தேடி உண்ணும் பழக்கம் பலருக்கு இருந்தாலும், ஆரோக்கியமான உணவையும் தேடி உண்பவர்கள் உண்டு. புதிதாக ஏதாவது ஒன்றை ஆரோக்கியமானது என்று கேள்விபட்டால் போதும், உடனே அதனை எப்படியாவது செய்தோ அல்லது வாங்கியோ சுவைத்து விடுவர். உணவு பிரியர்கள் என்பது இன்றைய காலக்கட்டத்தில் மட்டுமல்ல முன்பிருந்தே அதிகமாக தான் உள்ளனர். அதனால், உணவு வகைகள் பலவற்றை நம்மால் இப்போது சுவைக்க முடிகிறது.

சுவையான உணவு மிகவும் ஆரோக்கியமானதும் கூட என்று தெரிந்தால் அதனை அடிக்கடி சாப்பிடுவது தானே நம் பழக்கம். அந்த வகையில், வடஇந்தியர்களின் உணவுகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் கடலை மாவு குழம்பு பற்றி தான் நாம் இப்போது தெரிந்து கொள்கிறோம். இந்த குழம்பில் ஏகப்பட்ட சத்துக்கள் மறைந்துள்ளனவாம். மேலும், இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். அதனால் தான் வடஇந்தியர்கள் இதனை அடிக்கடி சமைத்து சாப்பிடுகின்றனர்.

பேசின் கி கதி என வடஇந்தியர்களால் அழைக்கப்படும் கடலை மாவு குழம்பில் சேர்க்கப்படும் பொருட்களில், புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த குழம்பு உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெரிதும் உதவக்கூடியது. ஒரு வேளை நீங்கள் இந்த குழம்பை விரும்பி சாப்பிடுபவர்களாக இருந்தால், அதிலுள்ள சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்…

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், எதை சாப்பிடுவதற்கு முன்பும் ஒரு முறை யோசித்து விட்டு தான் சாப்பிட வேண்டும். அப்படி ஒரு வேளை, உடல் எடை குறைக்கும் முயற்சியில் நீங்கள் இறங்கியிருந்தால், இந்த கடலை மாவு குழம்பை தயாரித்து சாப்பிடலாம். இந்த குழம்பின் முக்கிய பொருளே கடலை மாவு தான். கோதுமை மாவை விட கடலை மாவில் சிறந்த கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. அதுமட்டுமல்லாது, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஃபோலேட் மற்றும் குறைந்த கிளைசீமிக் குறியீடு ஆகியவையும் உள்ளன. இதன் காரணமாக இது எடையைக் குறைக்க உதவக்கூடியது. மேலும், இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாது இதயத்திற்கும் வலு சேர்க்கும்.

கடலை மாவு குழம்பு, மெக்னீசியம் மற்றும் குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். மெக்னீசியம் உங்கள் தசைகளை தளர்த்தி இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். அதே நேரத்தில், அதில் உள்ள பாஸ்பரஸ் லிப்பிட் வழிமுறையை சீராக்க உதவுகிறது. இது தவிர, குறைந்த கிளைசீமிக் குறியீடானது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

காலம் சமயம் பார்த்து தான் இந்த குழம்பை சாப்பிட வேண்டுமென்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கடலை மாவு குழம்பை உட்கொள்ளலாம். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று தெரியுமா? ஆமாம், ஏனெனில் இது நல்ல பாக்டீரியாக்களை தன்னுள் கொண்டுள்ளது. அவை குடலுக்கு ஏற்றதாக இருப்பதோடு, குடல் தாவரங்களை பராமரிக்க உதவுகிறது. மேலும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் காரணமாக இது செரிமானத்தை மேம்படுத்திட உதவுகிறது.

கடலை மாவு குழம்பு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு முழுமையான உணவாக அமையுமாம். ஏனெனில் இதில் ஃபோலேட், வைட்டமின் பி 6 மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இதன் காரணமாக இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, பெண்ணின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி மூலம் கருச்சிதைவு அல்லது பிற பிரசவ பிரச்சனைகள் ஏற்படாமல் குறைக்க உதவுகிறது.

இரத்த சோகை நோயாளிகளுக்கு கடலை மாவு குழம்பு சிறந்த உணவாகும். அதாவது இந்த குழம்பில் இரும்பு மற்றும் புரதம் அதிகம் இருப்பதால், பலவீனமானவர்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க ஒரு சிறந்த கருதப்படுகிறது. எனவே, உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் இந்த சுவையான குழம்பை அடிக்கடி செய்து சுவைத்து சாப்பிடுவதால், உடலில் ஹீமோகுளோகின் அதிகரிக்க செய்திடலாம்.

கடலை மாவில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது உங்கள் முகத்தின் அனைத்து வித பிரச்சனைகளையும் அகற்ற உதவுகிறது. அதாவது பருக்கள், கருப்பு புள்ளிகள் மற்றும் தேவையல்லாத முடி பிரச்சனைகள் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. அதனால், முகத்திற்கு கடலை மாவு தேய்த்து குளிக்குமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். நாம் தான் மாடர்ன் நாகரீக உலகிற்கு ஏற்றாற்போல, கெமிக்கல் நிறைந்த சோப்புகளை போட்டு குளிக்கின்றோம்.

எனவே, இனி எப்போதெல்லாம் நீங்கள் கடலை மாவு குழம்பு செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் தயக்கமின்றி நிறைய சாப்பிட்டு மகிழுங்கள்.