நேற்று மட்டும் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!! மொத்த எண்ணிக்கை 1,141ஆக அதிகரிப்பு..!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,141ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், நேற்று(24) மாத்திரம் 52 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 52 பேரில், குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 49 பேரும், இரண்டு கடற்படை வீரர்களும், இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து அழைத்துவரப்படும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதால் தற்போது வெளிநாடுகளில் இருந்து உடனடியாக கூடுதல் அளவில் இலங்கையர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படவேண்டியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,141ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 674 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 458 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 97 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.